சிறுநாகலூர் கிராமத்தில் சீனிவாச பொருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

மதுராந்தகம், அக். 7: சிறுநாகலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை ஒட்டி 16ம் ஆண்டு கருட சேவை, திருமஞ்சனம், திருக்கல்யாணம் உற்சவம் கடந்த இரண்டு தினங்களாக மிக விமரிசையாக அந்த கிராமத்தில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மேலும், அந்த கிராம வீதிகள் அனைத்தும் வண்ண விளக்குகளாலும் வாழை உள்ளிட்ட தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.இந்த நிகழ்ச்சியானது, புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை காலை கோ பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சுதர்சன யாகம், மகா பூரணாதி, மகா சாந்தி, திருமஞ்சனம் தீபாராதனை கருட சேவை வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை சீனிவாச பெருமாள் உற்சவர் அலங்காரத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் திருமஞ்சன மஞ்சளும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சாமிகளுக்கு கிராம மக்களின் சீர்வரிசையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுடன் திருவிதிவிழா வாணவேடிக்கையுடன் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post சிறுநாகலூர் கிராமத்தில் சீனிவாச பொருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: