மதுரவாயலில் பரபரப்பு; நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை முயற்சி: நாய் குரைத்ததால் ஆசாமிகள் ஓட்டம்

பூந்தமல்லி: மதுரவாயலில் நடிகை சோனா வீட்டுக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றபோது நாய் குரைத்ததால் ஆசாமிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. இவர், ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட் படங்களிலும் குத்தாட்ட பாடல்கள் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சோனா. இவர், சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 28வது தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் இருவர், வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது எகிறி குதித்து வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு சோனா வளர்த்து வரும் நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்துள்ளது.

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை பார்த்ததும் தப்பிஓட முயன்றனர். கொள்ளையர்களை பார்த்து நடிகை சோனா கூச்சலிடவே, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி சத்தம் போட்டால் அவ்வளவுதான் என மிரட்டியுள்ளனர். கத்தியை பார்த்து பயந்து ஓடியபோது கீழே விழுந்ததில் சோனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு ஆசாமிகளும் தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பினர். இதுகுறித்து சோனா, காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை க்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் நடிகை சோனா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட வந்த கொள்ளையர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post மதுரவாயலில் பரபரப்பு; நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை முயற்சி: நாய் குரைத்ததால் ஆசாமிகள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: