தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் பொதுக் கணக்குக் குழுவினர் கொல்லிமலை வட்டம், ஆரியூர் நாடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெறும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, உணவின் தரம், உணவுப்பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் குழுவினர் உணவு அருந்தினார்கள். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 884 பள்ளிகளை சேர்ந்த 39,450 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 59 அரசுப்பள்ளிகளில் 2,751 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரியூர்நாடு ஊராட்சியில் 8 பள்ளிகளில் 331 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து, கொல்லிமலை, வளப்பூர் நாடு கிராமப் பகுதிகளில் ரூ.338.79 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்மின் திட்டம் (1X 20 மெகா வாட்) குறித்து பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இத்திட்டத்தின்படி, அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்க 5 கலிங்குகளை முறையே அசக்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய இடங்களில் அமைத்து மழை காலங்களில் கிடைக்கும் நீரை கலிங்குகளில் சேமித்து அங்கிருந்து சுரங்கம் மூலமாக செல்லிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கிருந்து இரும்புக் குழாய்கள் மூலம் கொல்லிமலையின் தெற்கு பகுதியில் உள்ள புளியஞ்சோலை மலை அடிவாரத்தில் நீர் மின் நிலையம் அமைத்து 1 x 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் 2025-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுக் கணக்குக் குழுவினர் சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளிகள் விபரம், அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை விபரம், மருந்து பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை பொதுக் கணக்குக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். வார்டு எண்.2, முதலைப்பட்டி பகுதியில் 12.90 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிவுற்று தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று செயல்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது. பரமத்திவேலூர், அரசு பொது மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு வருவதை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலை துறை சார்பில், பிலிக்கல்பாளைத்தில் உயர்மட்ட பாலம் ரூ.32.50 இலட்சம் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் கிராமத்தையும், ஈரோடு மாவட்டம் கொடுமுடி கிராமத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் மற்றும் அணுகுசாலை அமைப்பது குறித்து பொதுக் கணக்குக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுக் கணக்குக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளில் துணைச்செயலாளர் பா.ரேவதி, குழு அலுவலர் வி.சுமதி, சார்புச் செயலாளர் .ஜெ.பாலசீனிவாசன், துணை மேயர் செ.பூபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன், மாவட்ட வன அலுவலர் கலாநிதி., நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்தீபன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post செல்வபெருந்தகை தலைமையில் பொதுக் கணக்கு குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு!! appeared first on Dinakaran.