திருப்பூர், செப். 26: அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் வாழ்த்து பெற்றனர். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். எம்பிக்கள் சுப்பராயன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 2023-2024ம் கல்வியாண்டில் நீட் நுழைவுத் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 464 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 236 மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில தகுதி பெற்றனர். அரசு பள்ளிகள் பிரிவில் பழனியம்மாள் நகரை சேர்ந்த ரூபஸ்ரீ 441 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சாந்தி நிகேதன் அரசு உதவி பெரும் பள்ளியை சேர்ந்த சஞ்சய் 687 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த யவானி என்ற மாணவி நீட் தேர்வை 2வது முறையாக தேர்வெழுதி 650 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார். நடப்பு கல்வியாண்டில் 145 மாணவர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் மூலம் 26 மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பினையும், 7 மாணவர்கள் பல் மருத்துவ படிப்பினையும் தேர்வு செய்துள்ளனர். மேலும், சித்தா, ஆயுஷ், யுனானி மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் 20 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அமைச்சர் மு.பெ. சாமிநாதனை திருப்பூர் மாவட்டத்தில் 2023-2024ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் மூலம் இளநிலை மருத்தும் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 33 மாணாக்கர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) (பொ) காளிமுத்து. மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
The post அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.