கோதையாறு பாசன அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு

 

நெல்லை, செப். 25: கோதையாறு பாசன அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று (25ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்டத்தின் மூலம் ராதாபுரம் கால்வாயில் உள்ள குளங்களுக்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், கடந்த ஆண்டு மழைக் காலத்தின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் தண்ணீர் திறந்து விடப்படும் தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததை அடுத்து அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், ராதாபுரம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான அப்பாவு கடந்த வாரம் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (25ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்டத்தின் கீழுள்ள ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு கோதையாறு பாசன திட்டட அணைகளில் இருந்து இன்று (25ம் தேதி) முதல் அடுத்த ஆண்டு பிப்.9ம் தேதி வரை 138 நாட்களுக்கு விநாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post கோதையாறு பாசன அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: