ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையை வெல்வோம்… கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை


புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிர் உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வங்கதேசத்தில் நடத்தப்பட இருந்த இந்த போட்டி, அங்கு நிலவும் கலவர சூழல் காரணமாக கடைசி நேரத்தில் யுஏஇ-க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தும் (அக். 17, 18). சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, அக். 20ம் தேதி துபாயில் நடக்க உள்ளது.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது (அக். 4). அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளின் சவாலை சந்திக்கிறது. பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் டெல்லியில் இருந்து நேற்று துபாய் புறப்பட்டனர். அதற்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: உலக கோப்பையை வெல்வது எங்களின் நீண்ட நாள் லட்சியமாக இருந்து வருகிறது.

அந்த தருணத்துக்காகவே நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். தாய் நாட்டுக்கும், எங்கு விளையாடினாலும் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும் ரசிகர்களுக்கும் பெருமை சேர்ப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காக முழுவீச்சில் தயாராகி இருக்கிறோம். கோப்பையை வெல்வதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2020ல் நடந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறினோம். தென் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த தொடரில் சிறப்பாக விளையாடினாலும், பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டோம். இந்த முறை எந்த சவாலையும் முறியடிக்கும் உறுதியும், தன்னம்பிக்கையும் எங்களிடம் உள்ளது.

துபாய், ஷார்ஜா மைதானங்களில் போட்டிகள் நடப்பதால் ஏராளமான இந்திய ரசிகர்கள் குவிந்து ஆதரவளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது எங்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும். அணியில் இடம் பெற்றுள்ள திறமையான இளம் வீராங்கனைகள் புதிய உத்வேகத்தை, ஆற்றலை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். உடல்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அனைவரும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இந்த முறை குறி தப்பாது. இவ்வாறு ஹர்மன்பிரீத் கூறினார்.

The post ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையை வெல்வோம்… கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: