இந்த பாரம்பரிய மிக்க நெசவுத்தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணம் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும், ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பருத்தி ரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக ட்வில் வீவ் ஆயத்த சட்டைகள், காம்பிரே ஆயத்த சேலைகள், ஸ்லப் பாட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்ஷன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியன விற்பனைக்கு உள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 12 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.08 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தீபாவளி 2024 பண்டிகை விற்பனை இலக்காக வேலூர் மண்டலத்திற்கு ரூ.8.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.73.28 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கு ரூ.1.15 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய திருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2024 சிறப்பு விற்பனை அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டோன் மேட் ஸ்கிரீன் துணிகள் தலையணை உறைவுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர தவணை திட்டத்தில் 56% கூடுதல் பலன் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.
கோ – ஆப்டெக்ஸ் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மிகப்பெரிய இமாலய சாதனை படைத்துள்ளார்கள். கோ-ஆப்டெக்ஸ் துணி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் விற்பனை செய்து வருகிறது. தீபாவளி 2024-30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
அதன்படி, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி மற்றும் பகிர்மானம்) ஞானபிரகாசம், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பெருமாள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் காமாட்சி கோ – ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.