எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை


மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மானாமதுரை பயணிகளுக்கு நிற்ககூட இடமில்லாத நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறை அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து அகலரயில் பாதை பணிகளுக்குபின் சேது எக்ஸ்பிரஸ், மெயில் என இரண்டு விரைவு ரயில்கள் மானாமதுரை வழியாக இயக்கப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த இரண்டு ரயில்களும் மண்டபத்தில் இருந்து இரவு நேரம் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக சென்னை செல்கின்றன.

இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வர். இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு பெட்டிகளும் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடியிலேயே நிரம்பி விடும். இதனால் மானாமதுரையில் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற முயலும் பயணிகளுக்கு இடம் இருப்பதில்லை. வேறு வழியின்றி தொலை தூரம் செல்ல வேண்டியிருப்பதால் கழிவறை அருகிலும், கதவு அருகிலும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள், முக்கிய முகூர்த்த தினங்கள், பண்டிகை காலங்களில் இந்த ரயில்களில் கூட்ட நெரிசலில் குழந்தைகள், கர்ப்பணிகள், முதியோரை அழைத்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ரயில் பயணி ராஜேஷ் கூறுகையில், ‘கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக வந்திருந்த எனது குடும்பத்தினர் 8ம் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் அமர்ந்து செல்ல இடமில்லை. திருச்சி வரை நின்று கொண்டே சென்றோம். எங்களுக்கு உடல் ரீதியாக பெரிய சிரமம் ஏற்பட்டது. எனவே மானாமதுரை வழியாக மண்டபம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: