தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தங்களது சொந்த மற்றும் அரசு நிதி ஆதாரங்களை கொண்டு நடத்தப்படுகின்றன. தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வருவாய் வீழ்ச்சி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தேர்வு கட்டண இழப்பின் காரணமாக மகா பல்கலைக்கழகத்தின் சொந்த நிதி ஆதாரங்கள் வெகுவாக பலவீனமடைந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் 159 ஆசிரியர்களும் (காலிப்பணியிடம் 181 – 53%) 231 நிர்வாக அலுவலர்களும் (காலிப்பணியிடம் 577 – 64%) பணியாற்றி வருகின்றனர். இது தவிர, 1181 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் 393 தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி பல்கலைக்கழகத்தின் சொந்த நிதியிலிருந்து மட்டுமே பெறப்படுவதால், பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ரூ.58 கோடி மாநில அரசு நிதி நடப்பு நிதியாண்டில் வெறும் ரூ.8 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது நிதி பிரச்சினையை தீவீரமடையச் செய்துள்ளது. அரசு நிதி சுமார் ரூ.50 கோடி அளவிற்கு வெட்டப்பட்டுள்ளதின் காரணமாக, பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் சுமார் 7 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியும் என்ற நிலை உறுவாகியுள்ளது. இதுதவிர, பல்கலை கழக நிதிநெருக்கடியினால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் காலிப்பணியிடங்கள் போன்றவை பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளையும், நிர்வாகப் பணிகளையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, மகா பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், மகா பல்கலைக்கழகத்திற்கான நிதி நெருக்கடியை சீர்செய்ய தமிழ்நாடு அரசின் நேரடி தலையீடு மிக அவசியம் என கருதுகிறேன்.
இந்தப் பின்னணியில், கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களது பரிசீலனைக்கு வைக்க விரும்புகிறேன்:
1. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதித் தேவையை தமிழக அரசு ஏற்றிருப்பது போல, இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டுகிறேன்.
2. தஞ்சை பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கான நிதியை தமிழக அரசு ஏற்றுள்ளது போல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஓய்வூதிய சுமையை அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி, இலட்சோப இலட்சம் மாணவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழலை காத்திட வேண்டுகிறேன்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வேண்டும் : சு.வெங்கடேசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.