வண்டலூர்-வாலாஜாபாத் சாலை ஓரத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை இல்லாமல் மதில் சுவர்: கலெக்டர் தடுத்து நிறுத்த தீர்மானம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் கிராம சிறு விவசாயிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் வண்டலூரில் நேற்று நடைபெற்றது. இதில், சங்க தலைவர் வ.கோ.இரணியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில், வண்டலூர் பெரிய ஏரி விவசாய நிலத்தில் அமைய இருந்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை தொடர் போராட்டத்தின் மூலம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றி அமைத்து விவவசாய நிலத்தை பாதுகாத்த விவசாயிகளை பாராட்டும் வகையில் பச்சை நிறத்திலான கதராடை அனுவிக்கப்பட்டது. பின்னர் சங்கம் புனரமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படனர். இதனை அடுத்து வண்டலூர் மலையில் இருந்து சிற்றேரி வழியாக வந்து பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்.

வண்டலூர் பெரிய ஏரி மதகு சீர் செய்யாமல் பழுதடைந்துள்ளது. கேட் அமைத்து மதகை சரி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வண்டலூர் நஞ்சை விவசாயநிலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் இருந்து ஏரிக்கரையின் கீழ் பகுதியில் பாதை அமைத்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர்வழி கால்வாய்களை அடைத்து சுற்றி மதில் சுவர் போடுவதால் விவசாயிகள் விவசாயநிலங்களுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கிறார்கள். எனவே, விவசாயிகள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருகின்ற 23ம் தேதி திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் குறை தீர்ப்பு முகாமில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

The post வண்டலூர்-வாலாஜாபாத் சாலை ஓரத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை இல்லாமல் மதில் சுவர்: கலெக்டர் தடுத்து நிறுத்த தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: