இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு சான்பிரான்ஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக ரூபாய் 7616 கோடி முதலீடுகளை ஈர்த்து 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுகிற வகையில் முதலமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் மைக்ரோசிப், கூகுள், பேபால், நோக்கியா, கேட்டர்பில்லர், அப்லைட் மெட்டீரியல்ஸ், ஈட்டன், அஷ்யூரன்ஸ், ராக்வெல் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட்டிருக்கிறார். அதேபோல, போர்ட் நிறுவனம் சென்னை மறைமலை நகரில் தொடங்கப்பட்ட உற்பத்தியை நிறுத்திய நிலையில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்கவதற்கான ஒப்புதலை பெற்றிருக்கிறார். இதனால் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒசூரில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணத்தில் நாள்தோறும் தொழில் முதலீடுகளை ஈர்க்கிற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்த செய்திகள் தமிழக நாளேடுகளில் தலைப்புச் செய்திகளாக வருவதை பார்த்து ஒட்டுமொத்த தமிழக மக்களே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து வருகிறார்கள். அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்புகிற போது சிகாகோ விமான நிலையத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் முதல்வரை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர். இந்திய – அமெரிக்க நாட்டு தொழில் முனைவோருக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்த்து உறவுப் பாலம் அமைத்த தமிழக முதலமைச்சரை இன்றைக்கு நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துகிற முயற்சியில் தமிழக முதல்வரை பாராட்டுவது நமது கடமையாகும். மூன்றாண்டு காலத்தில் மட்டும் ஏற்கனவே 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளும், 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டது. 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக தொடர்ந்து செயல்பாட்டுக்கு வரும் என்ற உறுதியை முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார். உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் உள்ள 500 பார்ச்சூன் நிறுவனங்களில் 19 நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் அமெரிக்க பயணத்தின் மூலம் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை போட்டு இன்று தமிழகம் திரும்பும் அவரை ‘முதலீடுகளை ஈர்த்த முதல்வரே வருக வருக” என தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரவேற்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்புகிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், அவருக்கு பெரும் துணையாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி. தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி: தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்து appeared first on Dinakaran.