சென்னை: திமுகவின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உள்ளது என திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கழகம் நல்ல கழகம் என்று பாடலுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக முப்பெரும் விழாவில் தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர்; திமுக தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை; தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக இன்று உயர்ந்து நிற்கிறது.
தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன். 14 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு 14-ம் தேதி சென்னை திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றோம் என்பதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்க தொழில் முதலீடுகள் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. அமெரிக்காவில் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பு பிற மாநில மக்களும் சமூக வலைதளங்களில் பாராட்டும் அளவுக்கு உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள்.
திமுக பவள விழா நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கம்பீரமாக இருப்பதற்கு திமுகவின் அமைப்பு முறையே காரணம். ஓர் இயக்கம் 75 ஆண்டுகள் நீடித்திருப்பது சாதாரண சாதனை அல்ல. தலைவன் தொண்டன் என்றில்லாமல் அண்ணன் தம்பியை போல் திமுக செயல்படுகிறது. என்னை தலைமிர்ந்து முழங்க வைத்த தீரர்கள் வாழும் திசையை நோக்கி வணங்குகிறேன். பெரியார் விருதை பாப்பம்மாள் பெற்றுள்ளது பொருத்தமானது; ஏனென்றால் பெரியார் என்ற பட்டம் அளித்தவர்களே பெண்கள்தான். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பெருமைக்குரியவர்கள்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு எனது பெயரில் விருது வழங்கியது பெருமையாக இருக்கிறது. தலைவன், தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு திமுக கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னை தலைமிர்ந்து முழங்க வைத்த தீரர்கள் வாழும் திசையை நோக்கி வணங்குகிறேன். 25 வயதை கொண்டாடிய வெள்ளி விழாவிலும் திமுக ஆட்சியில் இருந்து, 50 வயதை கொண்டாடிய பொன் விழாவிலும் திமுக ஆட்சியில் இருந்தது. பவள விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும்போதும் திமுகவே ஆட்சியில் இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் திமுக எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனையும் காப்பாற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுகவின் சேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவை. கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கேட்கக் கூட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய திமுக முயற்சிக்கும். ஸ்டாலின் என்ற ஒற்றை பெயருக்குள் கோடிக்கணக்கானவர்களின் வியர்வை, உழைப்பு அடங்கியுள்ளது.
இதுவரை சந்தித்த தேர்தல்களைப் போலவே அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் கூறுகிறேன்; யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்று கூறினார்.
The post திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது: திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.