சென்னை: இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதில், கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும்விதமாக நேற்று கோவாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி. இந்த நிதி உதவியானது நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையே பாதுகாப்பான மற்றும் வசதியான கப்பல் சேவைகளை உறுதி செய்ய முக்கியமானதாகும். மேலும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும். நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக, சாகார்மாலா திட்டத்தின்கீழ் ரூ.300 கோடி நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மிதக்கும் தோணித்துறை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்கும் நன்றி. மண்டபம், பாம்பன் மற்றும் தேவிப்பட்டினத்தில் கூடுதலாக 3 மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத்திலுள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பாரம்பரியத்தை மாநில அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாடு மாநில அரங்கினை உருவாக்குவதற்கு இந்திய அரசு 100% நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ராமேஸ்வரத்தின் முக்கிய தீவுகளை இணைக்கும் வகையில் 3 கூடுதல் மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல் appeared first on Dinakaran.