கடவூர், தோகைமலை பகுதிகளில் பாய்நாற்றங்கால் உற்பத்தியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடியில் பயிர் உற்பத்தி பணிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆற்றுப் பாசனங்களில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடந்து வருகிறது. தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளும் கிணறு மற்றும் குளத்துப்பாசன விவசாய நிலமாக உள்ளது. இந்த ஆண்டு காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆற்றுப்பசான விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாற்று உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடிக்காக விதை நெல் தெளித்து நாற்று உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். கடந்தாண்டு டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர்-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை மூலம் விவசாயிகள் பெற்று நெற்களை தெளித்து சாகுபடி செய்தனர். இதேபோல் இந்த ஆண்டும் வேளாண்மை துறை மூலம் விதை நெல்லை பெற்று சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

சம்பா சாகுபடியில் புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் குலைநோய், யானைக்கொம்பான், இலைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவறி 30 நாள் பயிர்களை (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்தால் மேற்கண்ட நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வளர்ந்த பயிரில் கொப்பறை அதாவது (பூக்கும் தருவாய்) பனி காலங்களில் ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நோய்தாக்கி மகசூல் குறையும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் சூரியன் ஒளி அடி தூரில் படும் வகையில் இடைவெளி விட்டு பயிர்களை நட்டால் புகையான் என்னும் நோயை தவிர்க்கலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
120 நாட்களில் மகசூல் அடையும் இந்த வகை நெல் விதைகளை விவசாயிகள் வேளாண்மை துறைகளில் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம். தற்போது சம்பா நாற்று உற்பத்தி பணிகளில் நவீன இயந்திரம் மூலம் நடவு செய்வதற்காக ஒருசில பகுதிகளில் பாய் நாற்று உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கடவூர், தோகைமலை பகுதிகளில் பாய்நாற்றங்கால் உற்பத்தியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: