மகனுக்கு சொத்து தர மறுத்ததால் கணவரின் இறுதிச்சடங்கை நிறுத்திய மனைவி: சுடுகாட்டில் 2 நாட்களாக காத்திருந்த சடலம்


திருமலை: மகனுக்கு சொத்து தர மறுத்ததால் கணவரின் இறுதிச்சடங்கை மனைவி தடுத்து நிறுத்தினார். இதனால் 2 நாட்களாக சடலம் சுடுகாட்டிலேயே கிடந்தது. தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் விலோச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் (35). இவரது மனைவி சந்தியா(30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் ஐதராபாத்தில் வசித்து வந்தனர். சுனில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் விரக்தியடைந்த சந்தியா, கணவரை பிரிந்து கடந்த ஓராண்டாக மகனுடன் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதிகளவு மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுனில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையறிந்த சுனிலின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சடலத்தை சொந்த ஊரான மாந்தினிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சடலத்தை கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்தனர். இதையறிந்த சந்தியா, தனது உறவினர்களுடன் அங்கு விரைந்து வந்து இறுதிச்சடங்கு செய்ய விடாமல் தடுத்தார். அப்போது சந்தியாவின் உறவினர்கள், சந்தியாவுக்கு ஒரு மகன் உள்ளதால் சொத்தில் பங்கு வேண்டும் எனக்கேட்டனர். ஆனால் சுனிலின் குடும்பத்தினர் இதை ஏற்கவில்லையாம். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இறுதிச்சடங்கு தடைபட்டது. இதுகுறித்து சந்தியா மற்றும் அவரது பெற்றோர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்திற்கு இறுதிசடங்கு செய்வது தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சுனிலின் சடலத்துடன் குடும்பத்தினர் சுடுகாட்டிலேயே காத்திருந்தனர்.

இதையறிந்த ஊர் பெரியவர்கள் நேற்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சந்தியாவிடம் உள்ள சுனிலின் மகனுக்கு உரிய சொத்து பிரித்து தருவதாக சுனிலின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர். இதையடுத்து சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய சந்தியா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இறுதிச்சடங்கு நடந்தது.

The post மகனுக்கு சொத்து தர மறுத்ததால் கணவரின் இறுதிச்சடங்கை நிறுத்திய மனைவி: சுடுகாட்டில் 2 நாட்களாக காத்திருந்த சடலம் appeared first on Dinakaran.

Related Stories: