கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து திருச்சி, கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவையில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக கோயம்புத்தூர் காந்தி நகர் பேருந்து பணிமனை எதிர் திசையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நூலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

கலைஞர் நூலகம், அறிவியல் மையம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை (டெண்டர்) பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், இணைய வளங்களும் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட உள்ளன.

The post கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: