யூடியூப் பார்த்து ஆபரேஷன் பீகாரில் சிறுவன் பலி: போலி டாக்டர் கைது

சரண்: யூடியூப்பை பார்த்து ஆபரேஷன் செய்ததில் சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் சரண் மாவட்டம், புவால்பூர் கிராமத்தில் வசித்தவர் கோலு என்ற கிருஷ்ணகுமார்(15). சிறுவனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவனுக்கு வயிற்று வலி அதிகமானதால் சரணில் மருத்துவமனை நடத்தி வரும் அஜித் குமார் புரியிடம் சிறுவனை அவனது பெற்றோர் கூட்டி வந்து காண்பித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் கோலுவுக்கு அஜித் குமார் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிறுவனை ஆம்புலன்சில் பாட்னாவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்தான். சிறுவனின் தாத்தா பிரகலாத் பிரசாத் கூறுகையில்,கோலுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய எங்களிடம் அனுமதி எதுவும் கேட்கவில்லை. சிறுவன் உயிரிழந்ததை கேள்விப்பட்டதும் அஜித்குமார் புரி தப்பி ஓடி விட்டார் என்றார். இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த அஜித் குமார் புரி போலி டாக்டர் என்றும். யூடியூப் பார்த்து தான் நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வார் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலி மருத்துவர் அஜித் குமார் கைது செய்யப்பட்டார்.

 

The post யூடியூப் பார்த்து ஆபரேஷன் பீகாரில் சிறுவன் பலி: போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: