தமிழகத்தின் வலிமையான திறனால் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு: அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் பேட்டி

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலத்தின் அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி: அமெரிக்காவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு சிறப்பாக உள்ளது. குறிப்பாக பசுமை தொழில்நுட்ப உற்பத்தித் திறனில் இது பிரதிபலிக்கிறது. பசுமை தொழில்நுட்ப கூட்டாண்மையில் தமிழ்நாடு குறிப்பிட்ட நிலை முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தமிழ்நாடு கணிசமான சூரிய ஆற்றலை கொண்டு உள்ளதாலும், தமிழகம் நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கி சென்று கொண்டு இருப்பதாலும் அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, ரூ.400 கோடி மதிப்பீட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டின் வலிமையான திறன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றனர். பசுமை தொழில்நுட்பத்தில் பங்குதாரர்களை அடையாளம் காண பல்கலைக்கழக ஆசிரியர்கள், இந்திய பட்டதாரிகள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மேலும் அடுத்த மாதம் சென்னை ஐஐடி உடன் இணைந்து சூரிய ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், பசுமை தொழில்நுட்பம், பசுமை கட்டிடம் என 4 திட்டங்களை தொடங்க உள்ளோம். இது மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி சான் அன்டோனியோ உடன் 15 ஆண்டுகளாக சகோதரி நகரமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் நதியை சுத்தப்படுத்துதல், வெள்ள நிவாரணம், கழிவுநீர் மேலாண்மை, நீர் மேலாண்மை என பல்வேறு துறைகள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தமிழக முதல்வர் அமெரிக்க பயணம் இருதரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அமைச்சர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தின் வலிமையான திறனால் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு: அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: