திமுக முப்பெரும் விழாவை ஒட்டி விருதுகள் அறிவிப்பு

சென்னை: திமுக முப்பெரும் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டான இந்த வருடம் செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடைபெறுகிறது.

திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் தந்தை பெரியார். பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. தொடக்க காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பிற்பகுதியில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அண்ணா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது அண்ணா மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்து, கடைசி வரை திமுக பொதுச் செயலாளராகவே அறிஞர் அண்ணா இருந்தார். அதேபோல அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறுகிறது.

இதனையொட்டி விருது பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ் தாசனுக்கும் வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.

 

The post திமுக முப்பெரும் விழாவை ஒட்டி விருதுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: