ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகே ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடலை சுற்றி 3.8 கி.மீ. தூரம் உள்ள சாலைகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்றுவரும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இன்றிரவு கார் பந்தயம் நடக்கிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2023ம் ஆண்டு டிசம்பரில் இரவு நேர தெரு கார் பந்தய போட்டியை நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) திட்டமிட்டிருந்தது.

அதற்காக ஐதராபாத்தை சேர்ந்த ஆர்பிபிஎல் என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு எஸ்டிஏடி ஒப்பந்தம் செய்திருந்தது. புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி, இன்றும், நாளையும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.5 கிமீ நீளத்துக்கு நடைபெற உள்ளது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது. இதில் சென்னை உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் சார்பில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டி நடத்தப்படுகிறது.

பந்தயம் நடைபெறும் சாலைகளின் இரு புறமும் கான்கிரீட் மற்றும் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. போட்டி இரவில் நடப்பதால் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

போட்டியை காண சிவானந்தா சாலை, மன்றோ சிலை, தீவுத்திடல் ஆகிய இடங்களில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: