சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: விண்வெளியில் தனி ஆய்வு மையத்தை அமைக்கவும் முடிவு

டெல்லி: ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். ஒன்றிய அமைச்சரவையில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-4 திட்டம்

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப உள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் விண்கலமானது அங்கே தரை இறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமியில் ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திரயான்-4 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2040க்குள் நிலவுக்கு சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டம்

ககன்யான் திட்டம் என்பது நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டமாகும். இந்த திட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பணிகளை மேற்கொள்வதற்கும் ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

விண்வெளியில் ஆய்வு மையம்

ரூ.20,193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிற்கென்று சொந்தமாக ஒரு விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. 2035க்குள் இந்தியாவிற்கென்று பிரத்யேக விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது அதற்கு (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்குவதற்கும் இன்றைய தினம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி கிரக ஆர்பிட்டர் மிஷன்

வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டம் ரூ.1,236 கோடியில் 2028ல் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான விண்கலம் அனுப்புவதற்கான திட்டமாகும்.

*ரூ.8,239 கோடியில் அடுத்த தலைமுறை ஏவு வாகனம் என்.ஜி.எல்.வியை தயாரிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

*இந்தியா மியான்மர் இடையே 1,643 கி.மீ தூரத்துக்கு தடுப்பு வேலி அமைக்க ரூ.31,000 கோடி வழங்க ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ராம்நாத் குழுவின் பரிந்துரைகளுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக மசோதா தாக்கலாக வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் 1951 முதல் 1967ஆம் ஆண்டு வரை ஒரே நோத்தில்தான் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

 

The post சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: விண்வெளியில் தனி ஆய்வு மையத்தை அமைக்கவும் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: