மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி கஞ்சா, குட்கா வியாபாரிகள் ஓட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா, குட்கா வியாபாரிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் 200க்கும் மேற்பட்டோர் வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். மேலும், சிலர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இப்படி பல தொழில்கள் நடைபெறும் திருப்பூரில் கடந்த அதிமுக ஆட்சியில் பான் மசாலா மற்றும் கஞ்சா விற்பனையும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கஞ்சா, குட்கா, ரவுடிகளை கட்டுப்படுத்த உத்தரவிட்டது.

அதன் பின்னர் தமிழகத்தில் படிப்படியாக கஞ்சா, குட்கா விற்பனை சரிந்தது. மேலும், திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கஞ்சா, குட்கா பான்மசாலா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் கட்டாயம் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கஞ்சாவையும் பயன்படுத்துகின்றனர். பெரியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரின் வாழ்வையும் கஞ்சா சீரழித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாநகரில் கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீசார் 24 மணி நேரமும் சீரிய முறையில் பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிய மது விற்பனை, பள்ளி, கல்லூரிகள் முன்பு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை போன்ற முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும், கடந்த மாதத்தில் மாநகரில் குட்கா, கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட குட்காக்களை பறிமுதல் செய்து சுமார் 30 க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா, குட்கா வியாபாரிகள் மாநகரை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருப்பூர் மாநகரில் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் பணியாற்றி வருகிறோம். கஞ்சா, குட்கா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். அதே போல் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்வது, கஞ்சா விற்றால் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும்.

மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை செய்தாலும் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் எந்த வித குற்றச்சம்பங்கள் எங்கு நடந்தாலும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம். பொதுமக்கள் அச்சமின்றி இருக்க காவல் துறை முழு ஏற்பாடுகளை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்

கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை

போலீஸ் கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரவுடிகள் குறித்து கண்காணிக்க ஒரு தனிப்படையும், பான் மசாலா, குட்கா, கஞ்சா போன்றவைகளை கட்டுப்படுத்த ஒரு தனிப்படையும், குற்றங்கள் குறித்து கண்காணிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் பிடித்தவுடன் அந்த போலீசாருக்கு கமிஷனர் லட்சுமி உடனடியாக பாராட்டுகளை தெரிவித்து வெகுமதி வழங்க தயங்குவதே இல்லை.

முக்கிய சந்திப்புகளில் அதிவிரைவுப்படை

மாநகரில் உள்ள 3 அதிவிரைவுப்படை போலீசார் படையும் மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் போலீசார் வாகன தணிக்கைக்கு உதவி செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் மாநகர பகுதிக்குள் குடிபோதையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது.

கள்ளச்சந்தையில் மதுவிற்றால் கடும் நடவடிக்கை

திருப்பூர் மாநகரில் ஏராளமான டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் பார்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நுண்ணறிவு பிரிவு அலார்ட்

திருப்பூர் மாநகரில் உள்ள 8 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கும் தலா ஒரு நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் படியும் கஞ்சா, குட்கா வியாபாரிகளை களையெடுக்கின்றனர். மேலும், வடக்கு போலீஸ் நிலைய பகுதியில் சுதந்திர தினத்தன்று பார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,506 மதுபாட்டில்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் தகவலின் பேரில் பறிமுதல் செய்தனர்.

The post மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி கஞ்சா, குட்கா வியாபாரிகள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: