பல்லடம்: பி.ஏ.பி. வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் வந்தடைந்தது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறும் இந்தத் திட்டத்தில் தற்போது 2ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 120 நாட்கள் பாசனம் பெறும் இந்த 2ம் மண்டல பாசனம் தண்ணீர் பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம் வந்து சேர்ந்தது.
அதன் பின்னர் பொங்கலூரில் ஒரு பகுதியை கடந்து சென்றது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் கடைமடை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தங்கு தடை இன்றி பிரதான கால்வாயில் வருவதை விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து அதனை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு தற்போது திறக்கப்பட்டுள்ள 2ம் மண்டல பாசன தண்ணீர் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பொங்கலூருக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வந்தது appeared first on Dinakaran.