மொழி பெயர்ப்பில் தவறு குரூப் 1 தேர்வில் சலுகை மதிப்பெண் கோரி வழக்கு : டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, சர்வேயர் காலனியைச் சேர்ந்த கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதவற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதல் நிலை தேர்வு ஜூலை 13ல் நடந்தது. இதற்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூலை 23ல் வெளியானது. இதில் ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை குறிப்பிட வாய்ப்பு வழங்கவில்லை. 6 வினாக்களுக்கான மொழி பெயர்ப்பு தவறாக இருந்தது. எனவே, இதுகுறித்து நான் முறையிட்டிருந்தேன். ஆனால், இதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘டிஎன்பிஎஸ்சி நடத்திய பல தேர்வுகளில் இதுவரை இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை. குறிப்பாக நீதித்துறை தேர்வுகளுக்கு கூட இறுதி குறிப்புகள் வெளியாகவில்லையே’’ என்றனர். பின்னர் மனுவிற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.3க்கு தள்ளி வைத்தனர்.

The post மொழி பெயர்ப்பில் தவறு குரூப் 1 தேர்வில் சலுகை மதிப்பெண் கோரி வழக்கு : டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: