பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை: பிரதமர் மோடியை மாணவர் சமுதாயம் மன்னிக்காது என செல்வப்பெருந்தகை ஆவேசம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் ‘முன்மாதிரி பள்ளி’களாக தரம் உயர்த்தப்படும். இந்த திட்டத்தில் இணையும் பள்ளிகளில், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள, ‘புதிய தேசிய கல்வி கொள்கையை” கட்டாயம் நடைமுறைப்படுத்தியாக வேண்டும். மோடி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை என்பது, மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும், இந்துத்துவா செயல் திட்டத்தை நிறைவேற்ற மறைமுகமாக உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழக பாஜ தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுத்தாலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபடி, இந்த பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாறியுள்ளதா? அருகில் உள்ள பள்ளிகளை வழி நடத்தும் அளவுக்கு மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் விசாரித்தோம். இதில், இந்த திட்டத்தின் கீழ் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை. ஏற்கனவே இருந்த நிலையை விட மோசமாகி இருக்கிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதை கொண்டு பள்ளிகளில் கழிப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, புதிய, நவீன கற்பித்தல் முறைகள், நூலகம், ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். ஆனால் சென்னையில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட ஏற்கனவே இருந்த இந்த வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை’ என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 3வது தளத்தில் கழிவறையின் கதவுகள் உடைந்து ஒன்றரை மாதங்கள் சரி செய்யப்படவில்லை. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இல்லாமல் 2 மாதங்கள் பாடம் நடத்தப்படவில்லை. நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது பிரதமர் மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது. எனவே இனியும் தாமதிக்காமல் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடிப்படை வசதிகள், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் மாணவர் சமுதாயம் மோடி அரசை மன்னிக்காது.

 

The post பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை: பிரதமர் மோடியை மாணவர் சமுதாயம் மன்னிக்காது என செல்வப்பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: