கொடைக்கானலில் ரெய்டு போதைக்காளான் விற்ற 7 பேர் அதிரடி கைது: வாங்கிய 10 பேரும் சிக்கினர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் போதைக்காளான் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவற்றை வாங்க வந்த சுற்றுலாப்பயணிகள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதைக்காளான், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மேல்மலை கிராமங்களில் இவற்றின் விற்பனையை தடுப்பதற்கு கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி தலைமையில் போலீசார், கடந்த 2 நாட்களாக விடுதிகள், காட்டேஜ்கள், டெண்ட் ஹவுஸ்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல வாகன சோதனையும் செய்தனர். இதில் போதைக்காளான் விற்றதாக கொடைக்கானல் மன்னவனூரை சேர்ந்த ரகுபதி (22), கல்லறை மேடு பாண்டியராஜன் (30), அன்னை தெரசா நகர் பிரதீப் (29), பாம்பார்புரம் மணி (45), ஆரோக்கியதாஸ் (52), மதுரை மாவட்டம், மேலூர் சூர்யா (25), ஊமச்சிகுளம் மகேஸ்வரன் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் போதைக்காளான் வாங்க வந்த கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10 சுற்றுலாப்பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி டிஎஸ்பி மதுமதி கூறுகையில், போதைக்காளான் விற்பது சம்பந்தமான சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு இதுபற்றி வீடியோ வெளியிடும் நபர்களின் வங்கி மற்றும் வலைத்தள கணக்குகள் முடக்கப்படும். போதைக்காளான், கஞ்சா பயன்படுத்துபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடந்த சில மாதங்களில் மட்டும் போதை காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 300 கிராம் போதை காளான், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

The post கொடைக்கானலில் ரெய்டு போதைக்காளான் விற்ற 7 பேர் அதிரடி கைது: வாங்கிய 10 பேரும் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: