சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, ஆக. 17: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பேரிட்டிவாக்கத்தில் கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்று மனுக்களைப் பெற்றார். பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலாளர் தனசேகர் வரவேற்றனர். இதில், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயிஷ் குப்தா, திட்ட அலுவலர் ஜெயகுமார், தாசில்தார் மதன், பூண்டி ஊராட்சி குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசியதாவது: 100 நாள் வேலையில் இனி கட்டிடம் கட்டலாம், நூலக கட்டிடம் கட்டப்படும். தூய்மை பணியாளர்கள் உங்கள் வீடு தேடி வந்தால் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இனி பிளஸ்டூ வரை மட்டுமல்ல மேல்படிப்பு வரைபடிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 வழங்கப்படுகிறது.

இதே போல் ஆண் பிள்ளைகளுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ₹1000 வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என பேசினார். இதற்கு முன்னதாக, கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்க்கக்கூடாது. பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பழைய ஊராட்சி கட்டிடம், நூலக கட்டிடம், சமூதாய கூடம் ஆகியவைகளை புதிதாக கட்ட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மானிய விலையில் விவசாயத்துறை சார்பில் மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: