பாஜக கவுன்சிலர் கணவரின் பிறந்த நாளில் துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்ட ஜெயிலர் சஸ்பெண்ட்: ெடல்லி திகார் சிறை நிர்வாகம் அதிரடி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் கோண்டா பகுதியை சேர்ந்த பாஜக மாநகராட்சி கவுன்சிலரின் கணவரின் பிறந்தநாள் விருந்து, சீமாபுரி பகுதியில் நடைபெற்றது. இந்த விருந்தில் டெல்லி திகார் சிறையின் ஜெயிலர் தீபக் சர்மாவும் பங்கேற்றார். அப்போது திரைப்பாடலுக்கு பலர் குத்தாட்டம் போட்டனர். திடீரென தீபக் சர்மாவும், கூட்டத்தோடு கூட்டமாக குத்தாட்டம் போட்டார். திடீரென அவரது பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தார். மேலும் அந்த துப்பாக்கியை காட்டிக் கொண்டே குத்தாட்டம் போட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்ததால், திகார் சிறை நிர்வாகம் ஜெயிலர் தீபக் சர்மாவை சஸ்பெண்ட் செய்தது. இதனுடன், முழு விவகாரத்தையும் விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘மண்டோலியின் சிறை எண்: 15ல் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வருகிறார். பிரபல தாதாக்கள் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானியா, சேனு, நசீர் கும்பல் ஆகியோர் அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், தீபக் சர்மா கைத்துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மக்கள் முன் காட்டியுள்ளார். அப்போது யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று மிரட்டி உள்ளார்.

விருந்து நடந்த போது அவர் பல ரவுண்டுகள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விருந்தில் பல தொலைக்காட்சி நடிகர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். இதுகுறித்து திகார் சிறை டிஜிபி சதீஷ் கோல்சா கூறுகையில், ‘வீடியோ வெளியானதை அடுத்து தீபக் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முழு விவகாரத்தையும் உண்மை கண்டறியும் குழு விசாரித்து வருகிறது. அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை கையில் வைத்திருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், அவரது துப்பாக்கி உரிமம் ரத்து செய்ய கடிதம் எழுதப்படும்’ என்று கூறினார்.

 

The post பாஜக கவுன்சிலர் கணவரின் பிறந்த நாளில் துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்ட ஜெயிலர் சஸ்பெண்ட்: ெடல்லி திகார் சிறை நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: