சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்புடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலின் காரணமாக அந்த போட்டியை நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.  நடப்பு ஆண்டில் மழை தொடங்குவதற்கு முன்பாகவே வரும் ஆக. 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பார்முலா 4 பந்தயம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மையப்பகுதியான அண்ணா சாலையில் இரவு நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆகஸ்ட் 24ம் தேதியே இந்த பந்தயம் தொடங்குகிறது. இருங்காட்டுக்கோட்டையில் இந்த கார் பந்தயம் நடைபெறும். மேலும் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சென்னை அண்ணா சலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கும் இதுபோன்ற கார் பந்தயம் பொதுமக்களுக்கு இடையூற்றை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற கார் பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கார் பந்தயம் நடக்க இன்னும் சில தினங்களே உள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: