விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை; சேலத்தில் நள்ளிரவில் 200 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி: ஏற்காட்டில் அதிகபட்சமாக 121.4 மி.மீ. பதிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பரவலாக விடிய, விடிய கனமழை பெய்தது. இம்மழையால் சேலம் மாநகரில் தாழ்வான இடங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக ஏற்காட்டில் 121.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே சேலத்தில் கடும் வெயில் நீடித்தது. மாலை குளிர்காற்று வீசியது. இரவு 9.15 மணியளவில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இடியுடன் கூடிய கனமழை பெய்யத்தொடங்கியது. இம்மழை விடிய, விடிய நீடித்தது. கனமழை காரணமாக சேலம் மாநகரத்தில் 40வது வார்டு பச்சப்பட்டி அசோக்நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் சூழ்ந்தது.

இப்பகுதியில் நெசவு ெதாழிலாளிகள் அதிகளவில் உள்ளனர். மழைநீர் சூழந்ததால்நெசவு செய்ய பயன்படும் பாவுநூல் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்தன. நள்ளிரவில் மழைநீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலை இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். வீடுகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் விடிய, விடிய மழைநீர் முழங்கால் அளவுக்கு ஓட்டியது. இதனால் கிச்சிப்பாளையம், களரம்பட்டி, நாராயணநகர், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சம் ஏற்காட்டில் 121 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

 

The post விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை; சேலத்தில் நள்ளிரவில் 200 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி: ஏற்காட்டில் அதிகபட்சமாக 121.4 மி.மீ. பதிவு appeared first on Dinakaran.

Related Stories: