நாகையில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை கப்பல் சோதனை ஓட்டம்

நாகை: நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று காலை சோதனை ஓட்டம் நடந்தது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. காலப்போக்கில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே நாகையில் இருந்து மீண்டும் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ‘‘செரியாபாணி” என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் வரவழைக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பலுக்கு இரு நாட்டு பயணிகளிடையே அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி அக்டோபர் 23ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதனால் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்த கப்பல் அந்தமானில் இருந்து சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடந்த 6ம்தேதி மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் துவங்கியது. நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் மீண்டும் இலங்கையில் இருந்து புறப்பட்டு, மாலை நாகைக்கு வந்து சேரும்.

 

The post நாகையில் இருந்து இலங்கைக்கு சிவகங்கை கப்பல் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: