பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘லாபடா லேடீஸ்’ சினிமா பார்க்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு

புதுடெல்லி: பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘லாபடா லேடீஸ்’ என்ற சினிமாவை இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பார்க்கின்றனர். பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரிப்பில் இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி இந்தி மொழியில் ‘லாபடா லேடீஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் வஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘லாபடா லேடீஸ்’ திரைப்படம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு திரையிடப்படுகிறது.

இந்த திரையிடலின்போது, நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குனர் கிரண் ராவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘லாபடா லேடீஸ்’ என்ற படமும் திரையிடப்படுகிறது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் ‘லாபடா லேடீஸ்’ திரைப்படம் இன்று மாலை 4.15 மணி முதல் 6.20 மணி வரை திரையிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்கின்றனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘லாபடா லேடீஸ்’ சினிமா பார்க்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: