சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பண்ணை, திடீர் நகர், அப்துல் ரசாக் தெரு, சாமியார் தோட்டம், செட்டி தோட்டம், நாகிரட்டி தோட்டம், அண்ணா கார்டன், நேரு நகர், கன்னிகாபுரம், களிக்குன்றம் மற்றும் கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்குதல் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

சைதாப்பேட்டையில் அரசுப் பண்ணை, திடீர் நகர், சாமியார் தோட்டம், செட்டித் தோட்டம், நாகிரெட்டி தோட்டம், நேருநகர், அண்ணா கார்டன், கோட்டூர் எல்லையம்மன் கோவில் தெரு போன்ற 11 இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு மேற்கொண்டார். இந்த இடங்களில் 500 குடியிருப்புகளுக்கு பட்டா இல்லை. இதை தவிர்த்து, ஒட்டுமொத்தமாக பாதி சைதாப்பேட்டைக்கு மேல் நத்தம் புறம்போக்கு என்கின்ற வகையில் அந்த இடங்களில் இருக்கிறது. அதில் நிறைய பேருக்கு தற்காலிக பட்டா மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான நிரந்தர பட்டாக்களை வழங்கப்படும்.

இதன்தொடர்ச்சியாக திடீர் நகர், மேக்ஸ்லான் போன்ற பல்வேறு நிலப்பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட குடிசைகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும், அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா தந்தால் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டித்தரப்படுவதற்கு தயாராக இருக்கிறது. அதற்கு அடுத்து, சாமியார் தோட்டம் பகுதியில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகள் வசித்து வருகிறார்கள்.

இந்த குடியிருப்புகள் பொறுத்தவரை தனியாருக்கு சொந்தமான இடங்களாக இருந்தாலும், அவருடைய வாரிசுதாரர்கள் இன்னமும் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் அந்த இடத்தை தானமாக இந்த பகுதி மக்களுக்கு தர தயாராக இருக்கிறார்கள், எனவே அதற்கான ஆவணங்களை பெற்று அந்த பகுதி மக்களுக்கு பட்டா தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளபடும். அதேபோல் செட்டித்தோட்டம் பகுதியில் வாரிசுகளே இல்லாத தனியாருக்கு சொந்தமான ஒரு இடம், அரசு புறம்போக்கு என்று பல்வேறு வகைகளில் இடங்களில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது.

அதற்கும் பட்டா தருவதற்கும், அந்த பகுதி மக்களுக்கு ஒரு நிரந்தரமான குடியிருப்பு வசதி ஏற்படுத்துவதற்கும் நம்முடைய மாவட்ட ஆட்சி தலைவர் வாயிலாக அங்கே ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. நேரு நகர் என்கின்ற பகுதியில் ஏறத்தாழ 17 இடத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கிறது, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கும் பட்டா தருவது பற்றி அதுசம்பந்தமாகவும், கோட்டூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் பட்டா தருவது சம்பந்தமாகவும், நம்முடைய மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு செய்யவிருக்கிறார்கள்.

இதையும் கடந்து ஒட்டுமொத்தமாகவே இருக்கின்ற நத்தம் பிரச்சினை, குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட 800 சதுர அடி அந்த இடங்களுக்கு ஒடிபி பிளாட்ஸ் என்று சொல்லப்படுகிற அந்த இடங்களுக்கு விற்பனை பத்திரம் முடிந்து இன்னமும் அவர்களுக்கு பட்டா தரப்பட வேண்டிய நிலை இருக்கிறது. அது சம்பந்தமாகவும் அரசு முடிவெடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: