11 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று காலமானார். அவருக்கு வயது 80. கடந்த 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 34 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. கடந்த 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை ஜோதிபாசு முதல்வராக இருந்தார். அதற்கு பின்னர் புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானார்.

புத்ததேவ் ஆட்சியில் இருந்த போதுதான் சிங்கூர் என்ற இடத்தில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார். 2008ல் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது. அதன் பின்னர் 2011ல் நடந்த பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்தது. மம்தா பானர்ஜி முதல்வரானார். தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து புத்ததேவ் ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் மாநில செயற்குழுவில் இருந்தும் விலகினார்.

கடந்த சில ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அவருக்கு இருந்தன. இந்த நிலையில், நேற்று காலை தனது இல்லத்தில் அவர் காலமானார். புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர்.

புத்ததேவின் மறைவு செய்தியை அடுத்து மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் புத்ததேவின் இல்லத்துக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட்கட்சி மாநில செயலாளர் முகமது சலீம் கூறுகையில், ‘‘ இன்று காலை புத்ததேவின் உடல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வைக்கப்படும். இறந்த பிறகு தன்னுடைய உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு தானம் எழுதி வைத்துள்ளார். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும் மருத்துவமனையிடம் உடல் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

The post 11 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: