அரியானா தேர்தலில் 20 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி: தனித்து போட்டியிட முடிவு

புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இதன் மூலம் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அரியானா மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நீடித்தது. இந்நிலையில், கூட்டணி குறித்து நேற்றைக்குள் முடிவு அறிவிக்க வேண்டுமென காங்கிரசுக்கு கெடு விதித்திருந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

20 பேர் கொண்ட இப்பட்டியலை வெளியிட்ட மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தால், ‘‘வேட்பு மனுதாக்கல் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. அதிக நேரம் இல்லை என்பதால் எங்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவோம்’’ என்றார். இதனால் தேர்தலில் தனித்து போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மியின் முதற்கட்ட பட்டியலில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ல் அரியானாவில் 46 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

 

The post அரியானா தேர்தலில் 20 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி: தனித்து போட்டியிட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: