மாம்பாக்கம் கிராமத்தில் தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்: எம்எல்ஏ பாபு ஆய்வு

மதுராந்தகம்: மாம்பாக்கம் கிராமத்தில் தரமற்ற தார்சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனிடையே செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு சாலையை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து மாம்பாக்கம் வழியாக புத்திரன்கோட்டை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தரைப்பலங்களுடன் சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.3.74 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சாலை அமைக்கும் பணியில் மாம்பாக்கம் கிராமத்தில் மண் பரிசோதனை செய்யாமல் சாலை அமைப்பதாகவும், அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்புகளின் பகுதியில் உயரமான சாலையாக உள்ளதால் மழை நீரானது தாழ்வாக உள்ள குடியிருப்புக்குள் செல்லும் நிலையில் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயுடன் சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சாமாதானம் பேசி தரமான சாலை அமைப்பதாக தெரிவித்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டது. அதனை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு நேற்று முன்தினம் மாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தபோது 50 மில்லி மீட்டர் உயரம் அமைக்க வேண்டிய தார் சாலை 32 மில்லி மீட்டர் மட்டுமே அமைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து தரமற்ற தார் சாலை அமைப்பதாக கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாம்பாக்கம் கிராமத்தில் தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்: எம்எல்ஏ பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: