இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் ரவி பிஷ்னோய் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்: அர்ஷ்தீப் சிங்

கொழும்பு: “ரவி பிஷ்னோய் எப்போதும் அவசரம் பிடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் தன்னுடைய உணவை மிகவும் வேகமாக சாப்பிடுவார். அப்படி இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் அவர் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்” என சக வீரரான அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து டி20 போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து டி20 தொடரில் பாண்டியா தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இது பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனத்தை பெற்றது. பின்னர் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது.

முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் வசப்படுத்தியது. குறிப்பாக 2வது போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ரவி பிஷ்னோய் பந்துவீச்சு குறித்து சக வீரரான அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளதாவது;

“பிஷ்னோய் பற்றி ஒரு விஷயம் என்னவென்றால், அவர் எப்பொழுதும் அவசரப்படுவார். மதிய உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, உணவை முடித்தவுடன், அவர் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்புவதற்கான அவசரத்தில் இருப்பர். எனவே எல்லாவற்றையும் அவசரமாகச் செய்யும் இயல்பினால், அவர் விரைவாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்” என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ரவி பிஷ்னோய்; ” ஆமாம், எனக்கு சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் உண்டு. அதனால் எனக்கு விரைவில் பசி எடுக்கும், பிறகு என் உணவையும் விரைவாக சாப்பிடுகிறேன். இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

The post இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் ரவி பிஷ்னோய் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்: அர்ஷ்தீப் சிங் appeared first on Dinakaran.

Related Stories: