சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக ரோகித்சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 5 நாட்களாக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்குட்பட்ட இந்த 2 டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிபெற்று முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் களம் காண்கிறது. விராட் கோஹ்லி, கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் டெஸ்ட்டில் களம் காண்கிறார். இதேபோல் ரிஷப் பன்ட் விபத்தில் சிக்கி மீண்டுசுமார் 630 நாட்களுக்கு பின் டெஸ்ட்டில் இந்தியாவுக்காக களம் இறங்க உள்ளார்.
இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பிடிக்கப்போவது யார், யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் ரோகித்சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார். 3வது இடத்தில் சுப்மன் கில், மிடில்ஆர்டரில் விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், ரிஷப்பன்ட் இடம் பெறுவர். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, அஸ்வின்,வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் இடம்பெறக்கூடும். மற்றொரு இடத்தில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் இடையே போட்டி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு இதுதான் முதல் டெஸ்ட்டாகும். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் தனது பணியை தொடங்குகிறார்.
சொந்த மண்ணில் அசுர பலத்துடன் திகழும் இந்தியா வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது.மறுபுறம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி, பாகிஸ்தானை அவர்களின் சொந்த மண்ணில் 2-0 என வென்று முதன்முறையாக தொடரை கைப்பற்றிய உத்வேகத்தில் உள்ளது. இதே வேகத்தில் இந்தியாவையும் வீழ்த்தும் நம்பிக்கையில் வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கில் லிட்டன் தாஸ், ஷாகிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹீம் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளனர்.
இவர்களுடன் ஷத்மான் இஸ்லாம்,மொமினுல் ஹக், ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் வலு சேர்ப்பர். பவுலிங்கில் தஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா அப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சேப்பாக்கத்தில் இதுவரை…
சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 1934ம்ஆண்டு முதல் டெஸ்ட் நடந்தது. இங்கு இதுவரை 34 டெஸ்ட் நடந்துள்ளது. இந்தியா விளையாடி உள்ள 34 டெஸ்ட்டில் 15ல் வென்றுள்ளது. வெற்றி சதவீதம் 44.11 ஆகும். 7 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 11 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கொரோனா கால கட்டத்தில் டெஸ்ட் நடந்தது. தற்போது 3 ஆண்டுக்குபின் டெஸ்ட் நடைபெற உள்ளது. வங்கதேசம் இங்கு முதன்முறையாக டெஸ்ட்டில் ஆடஉள்ளது.
* சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 2016ல் இந்தியா எடுத்த 759/7d ரன் தான் அதிகபட்சமாகும்.
* 1977ல், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 83 ரன்னில் சுருண்டது தான் குறைந்த பட்ச ஸ்கோர்.
* கவாஸ்கர் இங்கு அதிகபட்சமாக 12 டெஸ்ட்டில், 21 இன்னிங்சில் 1018 ரன் எடுத்துள்ளார். சச்சின் 970 ரன் அடித்திருக்கிறார்.
* சேவாக் 2008ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 319 ரன் விளாசியது தான் ஒரு இன்னிங்சில் தனி நபரின் பெஸ்ட் ஸ்கோராக உள்ளது.
* சேப்பாக்கத்தில் டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர்களில் சச்சின் (5சதம்) முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர் 3 சதம் அடித்திருக்கிறார்.
* பவுலர்களில் கும்ப்ளே 8 டெஸ்ட்டில் ஆடி 48 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஹர்பஜன் 42 எடுத்திருக்கிறார். அஸ்வின் 4 டெஸ்ட்டில் 30 விக்கெட் எடுத்துள்ளார்.
காத்திருக்கும் சாதனைகள்…
* இந்தியா இதுவரை 579 டெஸ்ட்டில் ஆடி 178 வெற்றி, 178 தோல்வி, அடைந்துள்ளது. 223 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்ட்டில் வென்றால் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியின் தோல்வியை விட டெஸ்ட் வெற்றி அதிகரிக்கும்.
* விராட் கோஹ்லி 152 ரன் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். மேலும் 58 ரன் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27ஆயிரம் ரன் மைல்கல்லை தொடுவார். மேலும் 27ஆயிரம் ரன்னை வேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடிப்பார்.
*ஜடேஜா இதுவரை 72 டெஸ்ட்டில் 294 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 300 விக்கெட் என்ற மைல்கல்லைத் தொட, அவருக்கு இன்னும் 6 விக்கெட்களே தேவை.
* இதுவரை 516 டெஸ்ட் விக்கெட் எடுத்துள்ள அஸ்வின் இன்னும் 4 விக்கெட் எடுத்தால். டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் வெஸ்ட்இண்டீசின் வால்சை(519 விக்கெட்) பின்னுக்கு தள்ளி 8வது இடத்திற்கு முன்னேறுவார்.
இதுவரை நேருக்குநேர்…
இந்தியா-வங்கதேசம் இதுவரை 13 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 11ல் இந்தியா வென்றுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதில் வங்கதேசத்தில் நடந்த 10 போட்டியில் 8ல் இந்தியா வென்றுள்ளது. 2டிராவும் அவர்கள் நாட்டில் நடந்த போட்டி தான். சொந்த மண்ணில் நடந்த 3 போட்டியிலும் இந்தியா எளிதாக வென்றுள்ளது.
*வங்கதேசத்திற்கு எதிராக 2017ல் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா 687/6d ரன் குவித்தது தான்அதிகபட்ச ரன். வங்கதேசம் டாக்காவில் 2000ல் 400ரன் எடுத்தது தான் ஒரு இன்னிசில் சிறந்தஸ்கோராக உள்ளது.
* வங்கதேசம் 91 ரன்னிலும், இந்தியா 243ரன்னிலும் சுருண்டது தான் குறைந்த ஸ்கோர்.
மழைக்கு வாய்ப்பு இல்லை !
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் முதல் 2 நாட்கள் வேகப்பந்துவீச்சு எடுபடும். கடைசி 3 நாட்கள் சுழந்பந்துவீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சென்னையில் அடுத்த 5 நாட்களும் மழைக்கு அதிக வாய்ப்பு இல்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 83 பாரன்ஹீட்டாகவும், அதிகபட்சமாக 96 பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.
The post சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.