நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் பணி நீக்கம்

ஜெயங்கொண்டம், ஜூலை 30: ஜெயங்கொண்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் குடிபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பட்டுசாமி மகன் பாலு (35), என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரை, கடந்த 6 மாதங்களுக்கு முன் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் சுற்றி திரிந்ததாகவும், சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. இதனால், இவர் அடிக்கடி மற்றத் தூய்மைப் பணியாளர்கள் வாகனத்தில் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை தூய்மை பணி செய்ய பேட்டரி வாகனத்தை கேட்டு நகராட்சியில் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், வாகனம் கொடுக்க மறுத்ததால், இவர் நேற்று மாலை அண்ணாசிலை அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறுக்கு கட்டையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மேலே ஏறி பாலுவை சமாதானம் செய்து பத்திரமாக கீழே இறக்கினர். இதனை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் அப்பகுதியில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: