கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் இருந்து சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதற்காக 2 முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வழியே சென்று வர 50% கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென நிர்வாகம் அறிவித்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது

இதனை கண்டித்து கடந்த 10ம் தேதி உள்ளூர் மக்கள் ஒரு நாள் முழுவதும் சுங்கச்சாவடியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிக தீர்வாக உள்ளூர் மக்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சார்ந்த வாகனங்களுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க கோரிய உத்தரவை எதிர்த்து அப்பகுதி மக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் எனவும் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

The post கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: