தொடரும் காற்றுடன் கூடிய கனமழை குந்தா, ஊட்டி தாலுகாவில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி குந்தா மற்றும் ஊட்டி ஆகிய தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை மூன்று மாதங்கள் பெய்யும். இம்முறை கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை என்ற போதிலும், தற்போது சற்று தீவிரமடைந்து தினமும் பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடனுக்குடன் அகற்றி வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மின் உற்பத்திக்கு பயன்படும் அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி அணைகளில் தற்போது தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. இதுதவிர, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது.

காற்றுடன் மழை பெய்து வருவதால் குளிர் அதிகரித்துள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அறைகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். மழை மற்றும் குளிரால், உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாகினர். இதனால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது.

ஊட்டி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இந்த இரு தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒரு நாள் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டார். நீலகிரியில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ஊட்டி 19, நடுவட்டம் 48, கல்லட்டி 13, கிளன்மார்கன் 44, குந்தா 67, அவலாஞ்சி 197, எமரால்டு 58, கெத்தை 13, கிண்ணக்கொரை 11, அப்பர்பவானி 102, கூடலூர் 61, தேவாலா 57, பந்தலூர் 70.

மரம் விழும் அபாயம்

ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் ரிச்சி காலனி செல்லும் சாலையில் மரம் ஒன்று விழுந்தது. இதனை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். இதேபோல் கிரேண்டப் சாலை, கூடலூர் செல்லும் சாலையில் பிங்கர் போஸ்ட் அருகே மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் மரம் விழும் அபாயம் தொடர்கிறது.

The post தொடரும் காற்றுடன் கூடிய கனமழை குந்தா, ஊட்டி தாலுகாவில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: