ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 26: சேலம் கோட்டை மைதானத்தில் நாளை காலை, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜ அரசை கண்டித்து நடக்கும் திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க மாAவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சேலம் திமுக மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ (மத்தியம்), டி.எம்.செல்வகணபதி எம்பி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே அமைய வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ அரசை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (27ம் தேதி) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, நகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கோட்ட செயலாளர்கள், ஊராட்சிகளின் கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: