ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி என்கவுன்டரில் இறந்த திருவேங்கடம் யார் என்றே தெரியாது

*சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது

*பொன்னை காவல் நிலையத்தில் பெண் புகார் மனு

பொன்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி என்கவுன்டரில் உயிரிழந்த திருவேங்கடம் யார் என்றே தெரியாது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுகிறது என பொன்னை காவல் நிலையத்தில் மகன்களுடன் வந்து பெண் புகார் மனு அளித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11வது குற்றவாளியான திருவேங்கடம் கடந்த 14ம் தேதி மாதவரம் பகுதியில் ஆயுதங்களை எடுத்து கொடுப்பதற்காக அழைத்து சென்றபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அருகேயுள்ள கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் எனவும், இவரது மனைவி மலர் எனவும், இவர் சென்னைக்கு வந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஈடுபட்டதாகவும் பல்வேறு யூடியூப் சேனல்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.இந்நிலையில் பொன்னை காவல் நிலையத்தில் கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மனைவி மலர் தனது 2 மகன்கள் மற்றும் கணவரின் புகைப்படத்துடன் வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் பொன்னை அடுத்த கீரைசாத்து நடுத்தெருவை சேர்ந்த திருவேங்கடம் உடல் நலக்குறைவால் கடந்த 29-9-2023 அன்று இறந்து போனார். அதற்கான இறப்பு சான்றுகளும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கீரைசாத்து திருவேங்கடம் சென்னையில் சுட்டு கொல்லப்பட்டதாக யூடியூப் சேனல்களில் தவறாக தகவல் பரவுகிறது. என் கணவர் பெயர், எங்கள் முகவரியை தவறாக யாரோ பயன்படுத்தியுள்ளனர்.என்கவுன்டரில் இ‌ற‌ந்த திருவேங்கடத்திற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது. என் கணவர் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு கூட சென்றதில்லை. வெளியூருக்கு எங்கேயும் சென்றதே இல்லை. அவர் கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை காரணமாக அவரின் தரப்பில் எதிரிகள் என நினைத்து எங்களுக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சுகிறோம். இந்த கொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரோ ஒரு கும்பல் கொலை செய்ததற்கு எங்கள் குடும்பம் பழிவாங்கபடக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி என்கவுன்டரில் இறந்த திருவேங்கடம் யார் என்றே தெரியாது appeared first on Dinakaran.

Related Stories: