கல்லாமொழியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

*டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், ராமர், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது கல்லாமொழி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த பார்சல் லோடு லாரியை சோதனையிட்டனர்.

இதில் 30 கிலோ எடை கொண்ட 106 மூட்டைகளில் சுமார் 3 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்த டிரைவரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, ஆரக்கோட்டையை சேர்ந்த அருள் விஜயகாந்த் (35), நெல்லை மாவட்டம் பணகுடி, மங்கம்மா சாலையை சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த பைபர் படகையும் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் பீடி இலை, லாரி, படகு உள்ளிட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள், சுங்கத்துறையிடம்
ஒப்படைக்கப்பட்டன.

The post கல்லாமொழியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: