துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த தமிழக பயணி கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.2.61 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், சர்வதேச தங்க கடத்தல் கும்பலைச் சேர்ந்த தமிழக பயணியை கைது செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஸ்வர ராஜா (35) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில், துபாய்க்கு போய்விட்டு மீண்டும் சென்னை திரும்பி வந்திருந்தார்.

சுங்க அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடமைகளையும் சோதனை நடத்தினர். அவருடைய பைக்குள் காப்பி மேக்கர் மிஷின் ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்து பரிசோதித்தனர். அதில் 2 தங்க கட்டிகளை அவர் மறைத்து வைத்திருந்தார். 4 கிலோ எடை கொண்ட அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.61 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து, தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் பாஜ பிரமுகர் துணையுடன் நடந்த ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்திற்கும், விக்னேஸ்வர ராஜாவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அந்த கடத்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விக்னேஸ்வர ராஜா, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், விக்னேஸ்வர ராஜாவை, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தேவைப்பட்டால், அவரை சுங்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ரூ.2.61 கோடி மதிப்புடைய, 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த தமிழக பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: