வண்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு: ஒருவர் கைது, 3 பேர் தலைமறைவு

ஆவடி: மொபட்டின் பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்த்தை திருடியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்(57). பேப்ரிகேஷன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி ஜூன் மாதம் காலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் இருந்து ரூ.3 லட்சத்தை துணி பையில் போட்டு கொண்டு அவரது மொபட்டின் பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர் அதே பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுபார்க்கும் கடைக்கு சென்று வாகனத்தை பழுது பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது வண்டியின் பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் வைத்திருந்த பையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து, ஆவடி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மோகன் மற்றும் மெக்கானிக் கவனிக்காத போது ஒருவர் மொபட்டின் பெட்டியை திறந்து அதிலிருந்த துணிப்பையை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மெபட்டிலிருந்து பணம் திருடிய ஆந்திரா மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த கங்காதரன்(50) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும், 3 பேர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை ஆவடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

The post வண்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு: ஒருவர் கைது, 3 பேர் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: