விவாகரத்து தொடர்பாக வாலிபரின் தந்தையிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய ஐஎஸ் ஆதரவாளர் கைது: சென்னை நண்பரும் சிக்கினார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் ஹிதயத்துல்லா (76). இவர்களது 4மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் 3வது மகன் ரிஸ்வானுக்கு தஞ்சையை சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ் பர்வீனுடன் கடந்த 2014ல் திருமணம் நடந்தது. அமெரிக்காவில் வசித்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமெரிக்காவில் கடந்தாண்டு விவாகரத்து பெற்றனர். அப்போது ரமீஸ் பர்வீனுக்கு நஷ்டஈடாக ரூ.42 லட்சம் வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து 2014 மே 8ம் தேதி அரங்ககுடியில் உள்ள ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் விவகாரத்து கொடுக்கப்பட்டது. பின்னர் ரமீஷ் பர்வீனுக்கு திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட 40 பவுன் நகையும் திருப்பி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளர் என்று கூறப்படும் இக்காமா சாதிக் பாட்ஷா (41) என்பவர், ரிஸ்வானின் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16ம்தேதி போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக ஹிதயத்துல்லா புகாரின்படி செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து இக்காமா சாதிக்பாட்ஷா மற்றும் அவரது நண்பரான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அயூப்கான் (52) ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் செம்பனார் கோயில் திருச்சிற்றம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற, நீதிபதி கனிமொழி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான இக்காமா சாதிக்பாட்சா மீது மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2022ல் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது கைது செய்யப்பட்ட இக்காமா சாதிக் பாட்சா மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்ததால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டதும், நீடூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றதும் குறிப்பிடத்தக்கது.

The post விவாகரத்து தொடர்பாக வாலிபரின் தந்தையிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய ஐஎஸ் ஆதரவாளர் கைது: சென்னை நண்பரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: