நீட்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் அம்பலம்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: நீட்தேர்வு முடிவுகளில் மேலும் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதியிருப்பதாக வெளியான தகவல், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மையங்களில் வெளியான முடிவுகள் ஏற்கனவே வெளியான முடிவுகளோடு ஒத்துப்போகாத வகையில் இருப்பது குறித்து திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான யு.பி.எஸ்.சி. தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இன்னும் 5 ஆண்டு காலம் பதவி இருக்கும் நிலையில் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யு.பி.எஸ்.சி.யில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜ பிரமுகர் ப்ரித்வி உட்பட 6 பேருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த ப்ரித்வி, அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர். சமீபகாலமாக பல்வேறு கிரிமினல் வழக்குகளில் பாஜவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது செய்திகளாக வெளிவருகிறது. இதன் மூலம் தமிழக பாஜ சமூக விரோதிகளின் புகலிடம் என்பது உறுதியாகியுள்ளது.

The post நீட்தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் அம்பலம்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: