தண்டராம்பட்டு, ஜூலை 21: தண்டராம்பட்டு அருகே விவசாயிடம் ₹3.50 லட்சம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கொல்லக் கொட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (56), விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கிலிருந்து ₹3.50 லட்சம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர், ராமலிங்கத்தை திசை திருப்பி, வண்டியில் வைத்திருந்த ₹3.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், சாத்தனூர் அணை போலீசார் நேற்று வீராணம் அருகே உள்ள கொறட்டாம் பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐ அம்பிகா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மட் அணிந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அனுமான் தீர்த்தம் பகுதியை சேர்ந்த கவுதமன்(25) எனவும், கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயி ராமலிங்கத்திடம் ₹3.50 லட்சம் பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ₹1.90 லட்சத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.
The post விவசாயிடம் ₹3.50 லட்சம் பறித்த வாலிபர் கைது போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார் தண்டராம்பட்டு அருகே appeared first on Dinakaran.