ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு

 

க.பரமத்தி, ஜூலை 20: கரூர் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பாதகாளியம்மன் அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கரூர் கொடுமுடி நெடுஞ்சாலையில் கரூர் ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குந்தாணிபாளையம், நத்தமேடு பகுதியில் பாதகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு காலை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்தடைந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது.

தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள மூலவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகை மூலிகை பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பாதகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குந்தாணிபாளையம் நத்தமேடு ஊர்பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

 

The post ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: